அடுத்த கேள்வி: உண்மையில் மிக அருமையான கேள்வி. கேட்டவருக்கு மிகுந்த நன்றி!
எழுத்து துறையில் இருக்குறதில் உங்க பலம் என்ன பலவீனம் என்ன Sis?
நீங்க கேட்ட பிறகுதான் பலவீனம் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். அப்படி எதுவுமே எனக்குத் தோன்ற இல்ல. இந்த எழுத்தினால் கிடைக்கும் ஆழ்ந்த அன்பை, மிக நெகிழ்ச்சியான தருணங்களை உண்மையாகவே எனக்குக் கையாலத் தெரியாது. அதைப் பலகீனத்தில் சேர்க்கலாமா தெரியாது.
என்னைக் கோபப்படுத்திப் பார்த்தால் அதை நன்றாகவே ஹாண்டில் செய்வேன். அல்லது, ஒரு கடினமான சூழ்நிலை வந்தால் கூட அதை நிதானமாகக் கையாளப் பிடிக்கும். அதை எப்படிக் கையாள்கிறேன் என்று என்னை நானே கவனிப்பேன். அதைவிட, அதை நல்ல முறையில் நான் கையாண்டுவிட்டால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோசத்தைத் தரும்.
ஆனால், இந்த அன்பைக் கண்டால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நிற்பேன். எங்கேயாவது ஓடி ஒளிந்துவிடலாமா என்கிற அளவுக்கெல்லாம் யோசிப்பேன்.
அளவுக்கதிகமான சந்தோசத்தில் அவர்களைச் சங்கடப்படுத்தும் விதமாக எதையும் கதைத்துவிடவும் கூடாது, அதே நேரம் அவர்களின் அன்புக்கு இணையான அன்பை நாமும் குடுக்க வேண்டும். இல்லையானால் அதுவே அவர்களின் மனத்தை நோகடிக்கலாம். அதனால் அன்பைக் கண்டால் நான் கொஞ்சம் பயப்படுவேன்.
இது என் பலவீனமே தவிர எழுத்துத் துறையில் இருப்பதால் வந்த பலவீனமா என்று சொல்லத் தெரிய இல்ல.
எழுத்துத் துறையில் இருப்பதால் வரும் பலம்: நிறைய உண்டு. என் கதைகளை வாசிக்கும் நபர்களோடு சத்தமே இல்லாமல் என் எழுத்தின் மூலம் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன். யோசித்துப் பாருங்களேன், அது எவ்வளவு பெரிய விசயம் என்று. அதை மிகப்பெரிய பலமாக, ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். அதனாலேயே அவர்களோடு கவனமாக உரையாட வேண்டும் என்கிற பொறுப்பும் வந்திருக்கிறது.
என் கதைகளும் ஜனரஞ்சக வகைக்குள் அடங்குபவை. பொழுதுபோக்கு என்பதற்குள்ளும் வரும். அதே நேரம் யதார்த்த வாழ்வியலையும் பேசும். அப்படி இருக்கையில் அந்தக் கதைக்குள் வாசிக்கிற நபருக்குத் தேவையான ஏதோ ஒன்றைச் சொல்லிவிட வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு இருப்பேன். அவரை ஏதோ ஒன்றைப் பற்றி யோசிக்க வைக்க வேண்டும். அது அவரின் வாழ்வின் முன்னேற்றத்துக்கான ஒன்றாக இருக்கவும் வேண்டும்.
அப்படிப் பார்க்கையில் என் எழுத்து யார் யாரையோ எல்லாம் யோசிக்க வைக்கிறது. அது அடுத்த பலம்.
அடுத்தது எழுதுவதுபோல் நானும் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை, என் சிந்தனைகளை, நான் நடக்கும் முறைகளை நானே கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஊருக்குத்தான் உபதேசம் என்று இருந்துவிட கூடாது இல்லையா? அந்த நினைப்பே என் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது. இது அடுத்த பலம்.
அடுத்ததாகக் குடும்ப நாவல்கள் என்பதையும் தாண்டி
நிறைய வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது என் சிந்தனைப் பரப்பைப் பெரிதாக்கி இருக்கிறது. நான் சில விசயங்களைப் பார்க்கும் கோணத்தை மாற்றி இருக்கிறது. அது உண்மையில் இந்த எழுத்தினால் உண்டான மாற்றமும் என் மீதான என் கணிப்பை இன்னுமின்னும் உயரக் கொண்டுபோவதை மிகப்பெரிய பலமாக நினைக்கிறேன்.
இவையெல்லாம் எழுத்துத் துறையில் இருப்பதால் எனக்கு உண்டான பலங்கள்.