• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் – நெதர்லாந்து (இதழ் 3)

ரோசி கஜன்

Administrator
Staff member

இன்றைய தினத்தில், எம்மினம், உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள் என்றால் அதற்கான முக்கிய காரணம், அப்படியொன்றும் இரகசியமானதல்ல; அனைவரும் அறிந்ததுதான். அக்காரணத்தின் பின்னால் ஓராயிரம் வேதனைகளும் வலிகளும் வரண்டிடாத கண்ணீரும் உண்டு. மறக்கவே முடியாத, ஜீரணிக்க முடியாத இழப்புகளும், ஏக்கங்களும் உண்டு.

இவையனைத்தையும் கடந்து, உலகெங்கும் எம்மை, அதாவது இலங்கைத் தமிழர்களாகிய எம்மைப் பரவிடச் செய்ததும், எம்மை வஞ்சித்த உள்நாட்டுச்சூழல் தான் என்பதை யாராலுமே மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

இனி வருங்காலத்தில், வெளிநாட்டில் வளரும் எம் தலைமுறைகளால் தாம் இங்கு வந்து சேர்ந்த விதத்தின் கனத்தை உணர முடியாது போனாலும் போகலாம். வாய்வழி கேள்விப்படுவதும் உணர்ந்து அனுபவிப்பதும் நிச்சயம் வேறு வேறுதானே?

அன்று, வசதி வாய்ப்புகள் இருந்தோர், எத்தனையோ இடர்களின் மத்தியில், உயிரைக்காக்கவென்று சொந்த ஊரைவிட்டு வெளியேறினார்கள். செல்லும் இடம் சரிவரத் தெரியாது, போகிற போக்கில் வாய்ப்புக் கிடைத்த நாடுகளில் எல்லாம் தஞ்சம் அடைந்தார்கள்; அகதிகள் எனும் முத்திரையோடு!

காலாச்சாரம், காலநிலை, உணவு, உடை, பழக்க வழக்கம் என அத்தனையாலும் வேறுபட்ட சூழல்களில், சொந்தம் துறந்து வாழும் கட்டாயம்! இருந்தும், மொத்தமாய் தம்மை, தம் அடையாளத்தைத் தொலைக்க நினைக்கவில்லை அவர்கள்.

அன்றாடம் எவ்வளவோ போராட்டங்கள் இருப்பினும், அனைத்திற்கும் முகம் கொடுத்து, ‘நாம் இன்னார்’ எனும் அடையாளத்தோடு அவர்கள் வாழ்வதைக் காண்கையில் நிச்சயம் பெருமை கொள்ளாதிருக்க முடியாது.

அந்த வகையில், நெதர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி வந்த இலங்கை சைவ சமயத்தவர்களில், இந்நாட்டின் வடக்கேயுள்ள ‘டென்ஹெல்டர்’ எனும் ஊரில் வசிப்போர் தமக்கு வழிபாடு செய்யவென ஓரிடத்தைத் தேடிய பொழுது, அங்கு அமைந்திருந்த நிக்கோலஸ் தேவாலயக் குருவானவர் அத்தேவாலயத்தின் அறையொன்றை அவர்களுக்காக வழங்க முன் வந்தார்.

அப்படித்தான், ‘ஸ்ரீ வரதராஜ செல்விநாயகர்’ தன் வாசத்தை இங்கு ஆரம்பித்தார்.

1543518044039.png


29.03 1991 அன்று, இந்நாட்டில் வாழும் சைவ மக்களால் ஒரு அறையில் ஆரம்பிக்கப்பட்ட ஆலயத்தில் உறைந்திருந்த விநாயகர், சிலகாலத்தின் பின், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவ்விடத்தின் பற்றாக்குறையினால் அருகிலிருந்த பழைய பாடசாலைக் கட்டிடம் ஒன்றிற்குக் குடிபோனார்.

1543518082063.png

01.08.92 இலிருந்து, இந்நாட்டுச் சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இயங்கும் இவ்வாலயம், சிறிது காலத்தின் பின்னர், பழைய கட்டிடங்களை இடிக்க வேண்டிய ஒரு சூழலில் ஆலயத்துக்கான சொந்த நிலம் வாங்கும் எண்ணத்தை விதைத்தது.

‘சாத்தியமா?’ என்ற கேள்வியின் மத்தியில், அதைச் சாத்தியமாக்கினார்கள் இங்கு வாழும் விநாயகரின் அடியார்களும், கைகொடுத்த லண்டன், மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும்.

அந்த வகையில், 01.09.2000 அன்று, ஆலயத்துக்கான நிலம் நெதர்லாந்து அரசிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு, ஆலயம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, 06.07.2003 இல், விநாயகருக்கும் அவரது பரிவாரங்களுக்குமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதுவரை, ஆண்டுதோறும் நடைபெற்ற அலங்கார உற்சவம், அதன் பின்னர், மகோற்ஷவமாகக் கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் நாள் தேர், அடுத்து தீர்த்தம், பூங்காவனம், வைரவர் மடை என, இலங்கை இந்தியாவில் ஆலயங்களில் நடைபெறுவது போலவே மிகச் சிறப்பாக உற்சவம் நடந்தேறி வருகின்றது.

அந்தவகையில் 2004 சித்தரத்தேர் அமைக்கப்பட்டது. விநாயகரின் அடியார்கள் மட்டுமன்றி, இந்நாட்டு மக்களுமே வியப்போடு கலந்து கொள்ளும் தேரோட்ட உற்சவத்தில், விநாயர் தேரேறி, மங்கள வாத்தியங்கள், பூஜைப்பாடல்கள், காவடி, கற்பூரச் சட்டிகள் சூழ டென்ஹெல்டர் வீதிகளில் உலாவரும் காட்சியைக் கண்டு ஆராதிக்கக் கண்கள் கோடி வேண்டும்.


1543518112795.png

ஆலயத்தை அத்தோடு நிறுத்தாது, ராஜகோபுரம் அமைக்கும் முயற்சி மேற்கொண்டு, 2011 இல் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கட்டு, 2013 நிறைவுற்றது. அந்த வகையில், ஐரோப்பாவில் உள்ள விநாயகர் ஆலயங்களில், வண்ணச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரம் அமையப்பெற்ற கோவில் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்ட எங்கள் ஆலயம், இன்று, இந்த ஊருக்கே கம்பீரமும் அழகும் கொடுக்கும் வகையில் வானளாவ நிமிர்ந்து நிற்கின்றது.


1543518141936.png
1543518170972.png
1543518183127.png

இவ்வாண்டின் உற்சவ காலமான இந்நாளில், எங்கள் ஆலயம் பற்றி செந்தூரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்வடைகிறேன்.

-ரோசி கஜன்.
 
Top Bottom