• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நவராத்திரி வழிபாடு !- இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள், தெய்வங்களிடம் வரங்கள் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்களாம். அவர்களால் மக்கள் மிகவும் அல்லலுற்றனர்,அஞ்சி நடுங்கினர். தவசீலர்களோ வேள்விகளைச் செய்ய முடியாது திண்டாடிப்போயினர். இந்நிலை தொடர்ந்தால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்றெண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட, அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வதென ஆலோசித்து, ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாதென்பது வழங்கப்பட்டிருந்த வரங்களில் ஒன்றென்பதால், தேவர்களோடிணைந்து அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.

மக்களின் துன்பம் கண்டு சகியாத தேவியும் நிகரில்லா அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை யென ஆனார்கள். அதே போல, இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டுச் சிலையாக நின்றார்கள். அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களைப் பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்துத் தர்மத்தை நிலைநாட்டினாள். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

ஏன் ராத்திரி என்ற கேள்வியையும் ஆராய்ந்தால், அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.

நவராத்திரி அலங்காரம் :

நவராத்திரி நாட்களில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவர். அம்பிகையை முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் முப்பெரும் சக்தியரை வழிபடுவார்கள்.

நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி, பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமானனாள். இரண்டாம் நாள் வழிபடப்படும் கவுமாரி, குமாரியாகப் போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள்.

மூன்றாவது நாளுக்கு உரியவாராகி, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள்.

நான்காம் நாளில் அருள்பவள், மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள்.

ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும் மோகினியாகவும் அலங்கரிப்பர்.

ஆறாவது நாளுக்குரிய தேவிவடிவம். இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம்.

ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள்.

எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள்.

ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம்.

பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்கரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.

இந்த வடிவங்களில் தேவியைத் தரிசித்து வழிபடுவதால் நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ்வர் என்பது ஐதிகம்.

ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்துச் சீதையை மீட்டு வந்தார்.

கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது.

பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான்.

தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்துத் தீமையை அழித்து நன்மை செய்வாள் எனத் தேவி மகாத்மியம் கூறுகிறது.

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.

விஜயதசமி:

இத்தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால், வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும். நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளைத் தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
 
Top Bottom