செந்தூரன் - நிதனிபிரபு
செந்தூரன்
“கொஞ்சம் சிரிச்சமாதிரி நில்லுங்க.” போட்டோ ஸ்டூடியோக்காரன் சொல்லவும் படக்கென்று இதழ்களில் புன்னகையைப் பூசிக்கொண்டேன். மேலதிகமாகக் கண்களை மலர்த்தினேன். அன்றலர்ந்த மலர்போல் அழகாகச் சிரித்தேன். இதமான புன்னகை! இதயத்தை வருடும் புன்னகை! உள்ளம் கொள்ளை போகும் புன்னகை. இப்படிப் பல புன்னகையை நான் வழங்க ஸ்டூடியோ அண்ணா கிளிக் கிளிக் என்று, என் பாவங்கள் மாறிவிடுமுன் வெகு வேகமாக கிளிக்கிக் கொண்டார்.
“வடிவா இருக்கிறீங்கம்மா!” கமெராவில் எடுத்த ஃபோட்டோக்களை சரிபார்த்துக்கொண்டு அவர் சொன்னபோது சட்டென்று என் முகத்தில் அன்றலர்ந்த மலரின் புன்னகை. புதிதாக ஒரு நம்பிக்கை ஒளி.
‘போனமுறை எடுத்த அந்த ஸ்டூடியோக்கார அண்ணா இப்படிச் சொல்லவே இல்ல. இண்டைக்குச் சகுனம் நல்லாத்தான் இருக்கு! அப்ப எல்லாம் நல்லதா அமையும்.’ இதுவரை நான் பிரசவிக்காமல் வைத்திருந்த கனவுகளும் கற்பனைகளும் தம் கூட்டை மெல்ல உடைக்கத் துவங்கியிருந்தன.
“கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..” என்னை நானே கேலி செய்துகொண்டேன். சட்டென்று என் இதழ்களில் வெட்கப்புன்னகை!
‘கடவுளே.. யாரும் பாத்தாலும்!’ சிரிப்பில் மலர்ந்திருந்த இதழ்களை அடக்க முயன்றவாறே விழிகளைச் சுழற்றினேன். யாரோ ஒருவன் என்னை வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டு கடந்தது போலிருந்தது. அதற்கும் சிரிப்பு வந்தது.
அந்த அண்ணா, நான் சிந்திய அத்தனை வகைப்புன்னகையிலும் ஒவ்வொரு வகை ஃபோட்டோக்களைத் தந்தார். எனக்கே நான் மிகவும் அழகாய்த் தெரிந்தேன். திரும்பத் திரும்ப என்னையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போலிருந்தாலும், அவர் என்ன நினைப்பார் என்கிற வெட்கத்தில் அடக்கிக்கொண்டேன். உள்ளமெங்கும் சந்தோசம் பரவ, “தேங்க்ஸ் அண்ணா!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.
போகும் என்னையே கனிவோடு அவர் பார்ப்பது தெரிந்தாலும் என்னைத் தாக்கவில்லை அது. கல்யாணச் சந்தையில் நீண்டநாட்களாக விற்கப்படாமல் எஞ்சிக்கிடக்கும் பண்டத்தில் நானுமொருத்தி. எனக்கென்றே ஒருவர் வராமலா இருக்கப் போகிறார்? எதிர்பார்ப்புடனேயே அம்மாவிடம் கொடுத்தபோது, “இந்தமுறை இன்னும் நல்லா வந்திருக்குப் பிள்ளை!” என்று அவரும் என் சந்தோசத்தைக் கூட்டினார்.
“அம்மா, இண்டைக்கு வேண்டாம் நாளைக்குக் குடுங்கோ.” சின்னத் தயக்கத்தோடு சொன்னேன்.
“ஏனம்மா?”
“அது.. நாளைக்கு நாள் நல்ல நாளாம். கலண்டர்ல பாத்தனான்.” சின்ன வெட்கத்தோடு முணுமுணுத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.
சிரிப்பும் வந்தது. பின்னே, சகுனம், ராசி, நல்லநாள், கெட்டநாள் இதெல்லாம் நானும் பார்க்கத் துவங்கிவிட்டேனே.
“இந்தமுறை சரியா வரும் எண்டு தரகரும் நம்பிக்கையாய்ச் சொல்றார் பிள்ள!” ஃபோட்டோவைக் கொடுத்துவிட்டு வந்து அம்மா சொன்னபோது, என் நடையில் துள்ளல் வந்து அமர்ந்துகொண்டது.
முதன் முதலாக வான்வெளியில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல என் கற்பனைகள் சின்னச்சின்ன தயக்கத்தோடு சிறகுவிரிக்கத் துவங்கின. என் இதழ்கள் ரகசியமாய்ப் பாடல்களை முணுமுணுக்கத் துவங்கின.
நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும்!
விரல்களைப் பிணைத்தவாறு பேச வேண்டும்!
காலை எழும்போது நீ வேண்டும்!
தூக்கம் வரும்போது தோள் வேண்டும்!
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்!
செந்தூரா ஆ..! ஆ..! சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ..! ஆ..! செங்காந்தள் பூ
உன் தேரா ஆ..! ஆ..!
இனியும் மறுப்பார்களா என்கிற குட்டிக் கர்வம் வேறு என்னிடத்தில்! பின்னே, இத்தனை நாட்களாக மேக்கப்பே போடாதவள் போட்டுக்கொண்டபோது என்னாலேயே என்னை நம்ப முடியவில்லையே! நம்பிக்கையோடு நல்ல பதிலுக்காகக் காத்திருந்தேன். ‘என் செந்தூரன் யாரோ?’ எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் என் பெண்மனம் தேடத் துவங்கியிருந்தது.
‘எப்படி இருப்பார்?’
‘அவர் எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். என்னைப் பிடிச்சு எனக்காக வாறவரின்ர மனம் கோணாம நடப்பன். அவருக்கு முதலே எழும்பி, அவருக்குப் பிடிச்சதைச் சமைச்சு வச்சு, பின்னேரம் எத்தனை மணிக்கு வந்தாலும் முகம் சுளிக்காமக் கவனிச்சு.. அவரின்ர குடும்பத்தை என்ர குடும்பமா நினச்சு, அவர் கோபப்பட்டாலும் பொறுமையா இருந்து.. சந்தோசமா வாழவேணும். என்னைக் கட்டினதுக்கு என்றைக்கும் அவர் சந்தோசப்படவேணும்!’ ஓராயிரம் கற்பனைகள்.
‘என்னவரின் தோளில சாஞ்சுகொண்டு, அவர் என்னைப்பார்க்க, நான் அவரின்ர கண்களைப் பார்த்தபடி, கரங்களைக் கோர்த்தபடி, இப்படி அடுத்தமுறை சோடியாக நிறைய ஃபோட்டோ எடுக்கவேணும். அதுவும் இந்த அண்ணாவின் ஸ்டூடியோவுக்குப் போய்த்தான் எடுக்கவேணும். ராசியான அண்ணா.’
எண்ணங்கள் அத்தனையும் எனக்குள் பரவசமூட்டிக்கொண்டிருக்க, கண்களில் கனவுமின்ன மாய உலகமொன்றில் சஞ்சரித்துக்கொண்டிருந்தேன்.
மனதின் ஓர் ஓரத்தில் மட்டும் ‘இன்னும் பதில் வரேல்லையே.’ என்று பரிதவித்துக்கொண்டிருந்தேன். இதற்குமுதல் கிட்டிய பல ஏமாற்றங்கள் பயத்தை வரவழைக்க, ‘பிள்ளையாரப்பா! இந்த வரன் சரியா வந்திடவேணும். யேசப்பா உமக்கு ஆளுயுரத்தில மெழுகுதிரி கொழுத்தவன்!’ என்று வேண்டிக்கொண்டேன்.
தரகர் சொன்ன இரண்டு நாட்களும் போனது. பதில் மட்டும் வரவேயில்லை. அம்மாவும் இயல்பாக இல்லாமல் பதிலை எதிர்பார்த்து வீட்டுக்கும் வாசலுக்குமாய் நடந்துகொண்டிருந்தார். அவரைப்போல என் தவிப்பை, எதிர்பார்ப்பை என்னால் வெளியே காட்டிக்கொள்ள முடியவில்லை.
அறைக்குள் அடைந்துகிடந்து உலகிலுள்ள அத்தனை தெய்வங்களிடமும் சரணடைந்திருந்தேன். ‘புத்த பெருமானே.. சரியா வந்திடவேணும். அல்லாஃ அக்பர்.. உங்களை எப்படிக் கும்புடவேணும் என்றுகூடத் தெரியாது. அதுக்காக ஏமாத்திப்போடாதீங்கோ. இந்தக் கல்யாணம் சரிவந்திடவேணும்!’
ஒருவர் கைவிட்டால் மற்றவராவது கைகொடுக்கட்டும் என்று எல்லோரையும் வேண்டிக்கொண்டேன். இப்படி எத்தனை தடவைகள் தான் நானும் ஃபோட்டோவைக் கொடுப்பதும், காத்திருப்பதும், எதிர்மறையாகப் பதில் வருவதும் கண்ணீரை அடக்கிக்கொண்டு ஒன்றுமேயில்லை என்பதுபோல் நடிப்பதும். இந்தமுறை ஏனோ ஆழமாய் நம்பினேன்!
“தரகரை ஒருக்காப் பாத்திட்டு வாறன் பிள்ளை!” இதற்குமேலும் காத்திருக்கப் பொறுமையில்லாது, விறுவிறு என்று சேலையைச் சுற்றிக்கொண்டு வீதியில் இறங்கினார் அம்மா.
வேகமாக வெளியே வந்து, வாசல் நிலையிலேயே காத்திருந்தேன். காயா பழமா? பதில் தெரிந்துவிடப்போகிற அந்த நிமிடங்களைக் கடக்கையில் நரகவேதனையை உணர்ந்தேன். இது புதிதல்ல எனக்கு. என் ஃபோட்டோ போகும் ஒவ்வொரு முறையும் அனுபவிப்பேன். ஆனாலும் பழகிப்போகாமல் ஒவ்வொருமுறையும் வலித்தது.
என் முகத்தைப் பார்த்துவிட்டு ஒருவன் மறுக்கிறான். யார் என்றே தெரியாதவனைக் கனவுகளில் சுமக்கிறேன் நான். சூடான கண்ணீர் துளிகள் என் கன்னத்தைச் சுட்டுக்கொண்டு ஓடின! எதற்கிந்த சாபம்? தெரியவில்லை!
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஊரார் கேட்கும், ‘இன்னும் கல்யாணம் சரிவரேல்லையா?’ என்கிற கேள்வியை எதிர்கொள்வேன் என்றே தெரியவில்லை.
இப்போதெல்லாம் தவிர்க்கமுடியாத காரணங்களைத் தவிர்த்துத் தேவையில்லாமல் வெளியே போவதேயில்லை. யாருடனும் கதைக்கவேண்டி வந்தாலே பயம் வந்து கவ்விக்கொள்ளும் என்னை. என்ன கதைத்துக்கொண்டிருந்தாலும், அந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களோ என்று உள்ளூரப் பயந்துகொண்டே கதைப்பதால், இப்போதெல்லாம் மற்றவர்களுடன் கதைப்பதை மெல்ல மெல்லக் குறைத்துக்கொண்டேன்.
Last edited by a moderator: