• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உள்ளத்தனையது உயர்வு- முகிலன் - இதழ் 4

ரோசி கஜன்

Administrator
Staff member


அது ஒரு வெயிற்காலம்; கடுமையான வெயிற்காலம்.


அங்கே ஒரு பிரமாண்டமான கோவில் கட்டுமானப்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.


உலகிலேயே பெரிய ஆலயத்தை தனது நாட்டில் அமைக்க வேண்டும் என்பது அரசனின் பெரு விருப்பம். அரசனின் ஆணைப்படி சுட்டெரிக்கும் வெயிலிலும் ஆயிரக்கணக்கான பணியாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.


இந்தக் கோவில் நிர்மாணப்பணியின் பிரமாண்டம் கண்டு கடவுளே திகைத்துப் போனார். என்றாலும், பணியாளர்கள் வெறுமனே ஊதியத்திற்காக வேலை செய்கிறார்களா அல்லது இறைபக்தியோடு உழைக்கிறார்களா என்றொரு சந்தேகம் கடவுளுக்குத்

தோன்றியது. தனது சந்தேகத்தைத் தீர்க்க, ஒரு முதியவர் போல் மாறு

வேடமிட்டு அங்கு சென்றார் கடவுள்.


அங்கு, கொழுத்தும் வெயிலில் கல் உடைத்துக் கொண்டு இருந்த ஒருவனை அணுகி, "ஐயா, நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?" என்று கேட்டார்.


வெயிலை விட சூடாக வந்தது பதில்.


"பார்த்தால் தெரியல? வேகாத வெயிலில் கல் உடைக்கிறேன். இப்படிக் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் என்பது எனது தலைவிதி. கேள்வி கேட்காமல் ஓடிப் போய் விடு!"


சார்ஜ் இழந்த ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பவன் போல் தவித்தார் கடவுள்.


சிறிது தூரம் தள்ளிப் போய், இன்னும் ஒருவனை அதே கேள்வியைக் கேட்டார்.


"என் குடும்பத்திற்காக மாடு மாதிரி உழைத்துக் கொண்டு இருக்கிறன். என்னை இப்படிக் கஷ்டப்பட விடுறானே அந்தக் கடவுள்." என்று சலிப்பாக வந்தது பதில்.


கடவுள் தன் முயற்சியைத் தொடர்தார். அனைவரிடமிருந்தும் இந்த இரண்டு விதமான பதில்களே விடையாகக் கிடைத்தன. நொந்து நூடில்ஸ் ஆன கடவுள் இங்கு வந்தது தவறோ என்று யோசிக்கலானார்.


அடுத்து ,வெயிலில் காய்ந்து உழைத்துக் களைத்தாலும் முகத்தில் மலர்ச்சி நிறைந்திருந்த ஒருவனைக் கண்டார் கடவுள். அவனிடமும் தன் அதே கேள்வியைக் கேட்டார்.


"ஐயா, நான் வணங்கும் கடவுளுக்கு கோயில் கட்டும் பணியில் நானும் இணைந்து வேலை செய்கிறேன். மகத்தான வாய்ப்பு இது. இதில் வரும் வருமானத்தால் என் குடும்பம் நிம்மதியாக இருக்கின்றது. நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி" நிதானமாக வந்தது பதில்.


அவனது மகிழ்ச்சி கடவுளுக்கும் தொற்றியது.


இப்படித்தான் எங்கள் அனைவரது வாழ்வும்.


நாங்கள் சுமக்கும் பாரங்கள் ‘சுகமா? சுமையா?’ என்பதை, அந்தப் பாரம் தீர்மானிப்பது இல்லை. நம் மனம் தான் தீர்மானம் செய்கிறது.


படிப்பை நேசிக்கும் மாணவனுக்கு ஒருபோதும் புத்தகப்பை சுமையாக இருப்பதில்லை.


விளையாட்டை நேசிப்பவனுக்கு அதில் வரும் காயங்களும் தோல்விகளும் அதிகமாக வலிப்பதில்லை.


பிள்ளைகளை நேசிக்கும் பெற்றோருக்கு குடும்பப் பாரம் பெரும் சுமையாக இருப்பதில்லை.


தான் செய்யும் தொழிலை நேசிப்பவனுக்கு அதில் வரும் கஷ்டங்கள் பெரும் சுமையாக இருப்பதில்லை.


வயது முதிர்ந்த பெற்றோரை பராமரிக்கும் பொறுப்பை, தனக்குக் கிடைத்த வாய்ப்பாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உள்ளவனுக்கு அதிலுள்ள சிரமங்கள் சுமையாகத் தெரிவதில்லை.


பயணங்களை நேசிக்கத் தெரிந்தவனுக்கு, பயணத் தூரமும் நேரமும் அதிகமாகத் தெரிவதில்லை.


நட்பை நேசிப்பவனுக்கு நண்பனின் பலவீனங்கள் முள்ளாகக் குத்துவதில்லை.


தன் குடும்பத்தவருக்காக அன்பையும் அக்கறையும் கலந்து சமையல் செய்வதால் தான் அம்மாக்கள் ஒருபோதும் சமையலில் சலித்துக் கொள்வதில்லை.


தான் வாழும் வீட்டை ஒரு கோயிலாக நேசிக்கத் தெரிந்தவனுக்கு, வீட்டுப் பராமரிப்பு சிரமமாக இருப்பதில்லை.


கொண்டாட்டங்களுக்கான அழைப்புகளை, நண்பர்கள் உறவினர்களைக் கண்டு மகிழ்வதற்கான வாய்ப்பாக நினைப்பவனுக்கு, அது நேரவிரயமாகத் தோன்றுவதில்லை.


வளர்ப்புப் பிராணிகளை தன் இரத்த உறவுபோல நேசிப்பவனுக்கு அவற்றின் கழிவுகள் கூட அசிங்கமாக இருப்பதில்லை.


வாழ்கையை இரசிக்கத் தெரிந்தவனுக்கு அதில் வரும் சிக்கல்களும் துன்பங்களும் கூட பெரும் சுமையாக இருப்பதில்லை.








 
Top Bottom