• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Val Thorens – யாழ் சத்யா-இதழ் 2

ரோசி கஜன்

Administrator
Staff member
1543008584350.png

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!

போவோமா ஊர்கோலம் பகுதியில், உங்கள் எல்லோரையும் பிரான்ஸ் நாட்டிலுள்ள ‘பனிச்சறுக்கு விளையாட்டு’ நடைபெறும் இடம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல எண்ணியுள்ளேன்.

அந்த வெண்பனி மலைகளில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

கடந்த வருடம், மார்கழி மாத நத்தார் விடுமுறை நாள். அன்று காலையில் எழும் போதே, என்னுள் ஒரு புத்துணர்ச்சியும் இனம் புரியாத படபடப்பும். காரணம், இத்தனை நாட்களாய்த் திரைப்படங்களில் நாயகனும் நாயகியும் டூயட் பாடும் போது பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்ட பனிப் போர்வையோடு காட்சியளிக்கும் மலைத் தொடர்களைக் காணப் போகின்றேனே என்ற பேரவா தான். அது மட்டுமா? கொரியன் சீரியல்கள் சிலவற்றில் ஒப்பாமார் (கதாநாயகர்கள்) விளையாடும் பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடப் போகின்றேனே. குதூகலத்துக்குத்தான் என்ன குறை?



1543008657361.png


நான் வசிப்பது Grenoble எனும் நகரத்தில். இந்தப் பனிச் சறுக்குப் பிரதேசம் ‘Val Thorens’ ஆனது, எனது இடத்திலிருந்து ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்களில் காரில் செல்லக் கூடியத் தூரத்தில் அமைந்துள்ளது.

ஐரோப்பாவின் அதி உயரமான பனிச்சறுக்கு பிரதேசம் (ski resort) எனும் பெருமைக்குரிய இந்த இடம், Saint-Martin-de-Belleville எனும் ஊரில் Savoie மாவட்டத்தில் Tarentaise பள்ளத்தாக்கில், French Alps இல் 2,300m உயரத்தில் அமைந்துள்ளது. மூன்று பள்ளத்தாக்குகளால் இணைந்து அமையப் பெற்ற Val Thorens, 600km இற்கும் அதிகமான பனிச்சறுக்குப் பிரதேசத்தைக் கொண்டு உலகிலேயே பாரிய பனிச்சறுக்குப் பிரதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

நாங்கள் அங்கு சென்றது ஒரு சனிக்கிழமை மாலையில் தான். வீட்டிலிருந்து ஒரு மூன்று மணியளவில் புறப்பட்டிருந்தோம். அடுத்து வந்த இரண்டரை மணிநேரங்களும் எப்படிக் கடந்தன என்று தெரியாமலேயே அத்தனை அற்புதமாகக் கடந்து போயிற்று. காரணம், வழிநெடுகக் கண்ணுக்கு அருமருந்தாகக் காட்சியளித்த, காணும் இடம் எங்கும் கொட்டிக் கிடந்த இயற்கையின் பேரழகு தான்.

என்னிடம் விவரிக்க வார்த்தைகள் இல்லை, அந்தக் கண்கொள்ளாக் காட்சிகளை ‘வர்ணிக்க’ என்று தான் சொல்ல வேண்டும். Grenoble நகரமே மலைகளால் சூழப் பெற்றதுதான். ஆனால், நகரத்துக்கு அருகே கண்ணில் படும் மலைகள் எல்லாம் வெறும் பாறைகளாகவும் ஆங்காங்கே, பச்சையாகக் காடுகளோடும் உச்சியிலே பனி முகட்டோடும் காணப்படும்.

Val Thorens ஐ நோக்கிச் செல்ல செல்ல சிறிது நேரத்திலேயே, தூரமாகத் தெரிந்த வெண்பனி முகடுகள் எல்லாம் எங்களை நோக்கி வருவது போல ஒரு மாயை தோன்ற ஆரம்பித்தது. பாதித் தூரம் போனதும் சுற்றி சுற்றி மலைப் பாதையில் கார் செல்லத் தொடங்கியது. ஆங்காங்கே வெண்பனிப் பூக்கள் தன் வேலையைக் காட்டி இரு பக்கமும் இருந்த மரங்களை அழகாக அலங்கரித்திருந்தன. பச்சையும் வெள்ளையுமாக ஊசிமுனை மரங்கள் கண்ணுக்கு அற்புத விருந்து.

நாங்கள் Val Thorens ski resort ற்கு ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு முன்னால் இருந்த ஒரு ஊரில் வீடொன்று வாடகைக்கு எடுத்து அன்றைய இரவை அங்கே தங்கிச் செல்லவென முடிவெடுத்தோம். ஒரு அறையோ, இரண்டோ, மூன்றோ எங்கள் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி எடுத்துக் கொள்ளலாம். ஹோட்டல்களும் இருந்தது தான். ஆனால், தனி தனி வீடுகள், ஏனோ எனக்கு அதிக சுதந்திரமும் வசதியுடையதுமாகப் பட்டதால் நாங்கள் வீட்டைத் தெரிவு செய்தோம்.

மாலை ஐந்தரை மணியளவிலேயே இருட்டி விட்டது. எனக்கோ, காரை விட்டு இறங்கியதும் உடல் முழுவதும் ஒரு புல்லரிப்பு. இதுதான் சொர்க்கமோ என்ற எண்ணம் தோன்ற, அப்படியே அந்தச் சூழ்நிலையை உள்வாங்கி, ஆசை தீர அந்த இடத்தின் அழகைப் பருகியபடி நின்றிருந்தேன்.

எங்கும் வெள்ளை வெளேரன்றிருக்க, ஒரு பக்கம் சூரியன் மறைந்ததற்கு அறிகுறியாகச் சூரியக்கதிர்கள் பட்டுச் சென்ற இடம் கொஞ்சமாய்ச் செந்நிறம் பூசியிருக்க… ஆஹா! காணக் கண்கள் கோடி வேண்டும்.

வீட்டினுள்ளே செல்லவே மனமற்று இருக்க, மிகப் புதிதான குளிர் உடலை வெடவெடக்க வைக்க, சுயவுணர்வு பெற்றுக் குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது உள்ளே செல்ல விழைந்தேன்.

அங்கே எங்களுக்காகக் காத்திருந்த வீட்டின் உரிமையாளர், பிரெஞ்சுக்கார்கள் வழக்கப்படி கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தமிட்டு உரிய வரவேற்பை அளித்து, அங்கேயே தயாரிக்கப்பட்ட ஜாம் ஒன்றையும், பதப்படுத்திய மின்ட் இலைகளையும் அன்பளிப்பாகத் தந்தார். நாங்கள் கொண்டு சென்றிருந்த வைன் போத்தலை அவருக்குக் கொடுத்து எங்களது நன்றி நவில்தலை தெரிவித்து விட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம்.

வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த கணப்பு அந்தக் கடுங்குளிருக்கு இதத்தைத் தர, சிறிது நேரம் கணப்பின் அருகே நின்று கொண்டேன்.


1543008738124.png

வீட்டினுள் சென்றாலும் என் பார்வை முழுவதும் யன்னல் வழியே வெளியே தான் இருந்தது. பனிச்சறுக்குவதற்கு மலையின் மேலே செல்வதற்கு உதவி செய்யும் கம்பியாலானது போன்ற இருக்கைகள் பல கேபிள்களில் அசைந்தவாறு இருந்தன. தூரத்தில் தெரிந்த மலை உயரத்தில் ஆங்காங்கே தெரிந்த சிறு வீடுகள், இந்தக் குளிரிலும் பனியிலும் மனிதர்கள் எப்படி வசிக்க முடியும் என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம், பயணம் செய்த அலுப்புத் தீர எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். பின்னர் அங்கிருந்த ஈரமான சுத்தக் காற்றைச் சுவாசித்தவாறே நடந்து சென்று அருகிலிருந்த ஒரு ரெஸ்டாரான்டில் இரவு உணவை முடித்துக் கொண்டோம். திரும்பி வரும் வழியில், ஆங்காங்கே இருந்த வீடுகளிலிருந்து புகைப்போக்கியால் வந்து கொண்டிருந்த புகை அங்கே கணப்புகள் எரிந்து கொண்டிருந்ததைப் பறை சாற்றின. நத்தார் தாத்தா இந்த புகைப்போக்கியால் தானே இறங்கி பரிசு வைப்பார் என்ற எண்ணம் தந்த புன்னகையோடே நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பிச் சென்று, அந்த இரவை பனிமலைகளுக்கிடையே இருக்கிறோம் என்ற அற்புதமான உணர்வோடு கழித்தோம்.

1543008767288.png



அடுத்தநாள் காலை எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டுத் தயாராகவும் நாங்கள் ஆர்டர் செய்திருந்த பாணை (bread) கொண்டு வந்து தந்தார்கள். வீட்டு உரிமையாளர் தந்திருந்த அந்த இரசாயனக் கலப்பற்ற இயற்கையாக தயாரிக்கப்டிருந்த ஜாமை பாணில் பூசி ஒரு கஃபேயோடு காலை உணவை முடித்தோம். அப்போது தான் உதிக்க ஆரம்பித்திருந்த சூரியனின் கதிர்கள் பட்டு அந்த வெண்ணிற மலைகள் பொன்னிறத்தில் தகதகத்தன. தூரமாய் உயரத்தில் தெரிந்த பனிமூட்டம் அங்கே பனி பொழிவதைக் காட்டியது. கஃபேயுடன் யன்னலால் சூரியோதயத்தையும் சேர்த்து பருகியவாறு இருக்க இங்கேயும் பூஞ்சிதறலாய் பனிப்பொழிவு ஆரம்பித்தது.

கஃபேயை மேசையில் வைத்து விட்டு வெளியே ஓடிச் சென்று “புதுவெள்ளை மழை இங்கு பொழிகிறது…” என்று கைகைளை இரு பக்கமும் நீட்டியபடி சுற்றிக் கொண்டே பாட ஆரம்பித்தேன். ஊசியாய் உடம்பைத் துளைத்த குளிரில், அப்போது தான் ஜக்கெட் எதுவும் அணியாமலேயே வெளியே ஓடி வந்திருந்த என் சிறுபிள்ளைத் தனத்தைப் பார்த்துச் சிரித்தபடி உள்ளே சென்றேன்.
 

Attachments

Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member

பின்னர், காரில் ஒரு பதினைந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே சென்றிருக்கவும் Val Thorens ski resort வந்தது. ஆரம்பிக்கும் இடத்தில் ஏகப்பட்ட ஹோட்டல்களும் ரெஸ்டோரண்டுகளும் பனிச்சறுக்கு விளையாடுவதற்குரிய உபகரணங்கள், உடைகள் விற்கும் கடைகளும் காணப்பட்டன. போலீசாரும் ரோந்து செல்வதைக் காண முடிந்தது.

இதுவரை நான் பனிச்சறுக்குச் செய்ததில்லை என்பதால் என்னிடம் அதற்குரிய உபகரணங்களோ, உடையோ இருக்கவில்லை. அருகிலிருந்த கடையில் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு நாங்கள் முதலே முன்பதிவு செய்திருந்த கற்பிக்கும் ஒரு நிறுவனத்தை அடைந்தோம். எனக்கு ஏனோ இரு குச்சிகளோடு காலில் கட்டியபடி பனிச்சறுக்கு செய்யும் விளையாட்டுக் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தியிருக்க நான் Snow board தான் வாங்கியிருந்தேன். அது ஒரு பலகை. அதன் மீது ஏறி நின்று சறுக்கிச் செல்ல வேண்டும். எனக்கு அதைக் கற்பிப்பதற்கு ஒரு பெண் கூடவே வந்தார்.


பயிற்சிக்கு என்றே ஆங்காங்கே சில உயரம் குறைந்த இடங்களை பிரித்து வைத்திருந்தார்கள். எனக்கோ மனசுக்குள் திக்திக்கென்றது. வெகு உயரத்தில் இருந்து சர்சர் எனச் சறுக்கிக் கொண்டு வரும் உருவங்கள் எல்லாம் சிறு எறும்புகளாய் கண்ணில் பட்டு என் தீராத ஆசையை பேராசையாக்க, அருகே சறுக்கிக் கொண்டிருந்த நாலைந்து வயது இளஞ்சிட்டுகள் ‘உன்னாலும் முடியும்’ என தன்னம்பிக்கையை என்னுள் விதைத்தன.


முதலில் Snow board இல் சமநிலை தப்பாது எப்படி நிற்பது என்று கற்றுத் தந்தவர், பின்னர் எப்படி உடலை முன்புறம் குனிந்து சமனிலையைப் பேணுவது போன்ற நுட்பங்களை ஒவ்வொன்றாக சொல்லித் தர ஆரம்பித்தார். முகத்தில் பூஞ்சிதறலாய் விழும் பனி ஒரு புறம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெள்ளை வெளேரன காட்சி தரும் இயற்கைஅன்னையின் அழகு ஒரு புறம், பனிச் சறுக்குச் செய்பவர்கள் ஒரு புறம், ஆங்காங்கே அங்கும் இங்குமாக அசைந்து கொண்டிருக்கும் கேபிள்கார்கள் ஒரு புறம் என்று அனைத்துமே எனக்கு புதிய அனுபவமாய் புளங்காகிதம் அடையச் செய்தது.




ஒன்றரை மணி நேரப் பயிற்சியில் விழுந்தெழாமல் ஒரு பத்தடி தூரமாவது சமனிலையோடு செல்லக் கற்றுக் கொண்ட சந்தோசத்தோடு அந்த இடத்தை விட்டகன்றோம். (எத்தனை தரம் விழுந்து எழும்பியது என்று கேட்கப்படாது. அது பரம ரகசியம்)

அதன்பின் பள்ளத்தாக்கில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு இடம் மாற்றும் ஒரு கேபிள்காரில் இரண்டு தரம் அங்கும் இங்குமாக போய் வந்தோம். மேலிருந்த படியே கீழேயும் சுற்றி வரவும் தெரிந்த பனிப்பிரதேசத்தைப் பார்த்த போது இது தான் சொர்க்கம் என்று கூவத் தோன்றியது. அப்போது இடைவெளியில் நின்று விட்ட கேபிள்கார் ஒரு நொடி நரகத்தையும் காட்டிச் சென்றது. இனி அசையவே மாட்டாதோ என்று நான் பயத்தில் அலறத் தொடங்க முதலே சிறிது நேரம் எங்களை ஒரே இடத்தில் அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு பின்னர் சமர்த்தாக எங்களை கொண்டு போய் இறக்கி விட்டது.




அங்கே இருந்த ரெஸ்டோரண்ட் ஒன்றில் மதிய உணவை முடித்துக் கொண்டு அருகே சிறிது நேரம் உலாவினோம். வீதி மட்டும் நடுவில் சுத்தம் செய்யப்பட்டு இருக்க, மற்றபடி, காணும் இடமெங்கும் பனிமயம். பனியில் கால் புதைய புதைய நடப்பது கூட ஒரு பேரானுபவமாகவே இருந்தது. திரைப்படங்களில் பார்த்தது போல பனியை கையால் உருட்டி ஆளாளுக்கு எறிந்து விளையாடி எங்களின் பால்ய காலத்துக்குச் சென்று மகிழ்ந்தோம்.



Ice diving, Paragliding, Panoramic Helicopter flight, Dogsled, Snowshoes by night என்று ஏகப்பட்டசெயற்பாடுகள் அங்கிருந்தன. Val Thorens இன் சிறப்பு வருடத்தில் அனைத்து நாட்களும் பனிச்சறுக்கு செய்ய முடியும். அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று ஒவ்வொரு விடயமாக அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.



பின்னர், நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு திரும்பிச் சென்று எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு Grenoble நோக்கித் திரும்பினோம். அலுத்துக் களைத்துப் போய் வந்தாலும் மனசு முழுவதும் ஒரு பூரண நிறைவு. அது சொற்களால் விவரிக்க முடியாதது. வெறும் கனவாய் மட்டுமே போய் விடும் என்று எண்ணியிருந்த ஒரு விடயம் நனவாகியதில் வந்த ஒரு ஆத்மார்த்த திருப்தி.

அதை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு Val Thrones க்கு என்னோடு பயணப்பட்ட உங்களை, அடுத்ததாய் இன்னொரு ‘போவோமா ஊர்கோலம்’ பகுதியில் நான் சென்று மகிழ்ந்த வேறோரு இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி விடை பெற்றுக் கொள்கிறேன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
இந்த அனுபவப் பகிர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களிடமும் இப்படியான அனுபவங்கள் உண்டா ? எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Top Bottom