ஒளியாகிய பெரியவருக்கு ஒரு மகள் இருந்தாள்.
தாமிரா.
தாமிரா போல ஒருத்தியை நீங்கள் கண்டிருக்க முடியாது. கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும் காற்றின் அசைவுகளில் கூட அவளுக்கு புன்னகைக்கக் காரணம் இருக்கும். அவளின் முடிவுகள் செயலாவதை எந்தக் காரணியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. ஆண், பெண் வேறுபாடுகளை அவள் மனம் அறியாது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம் செயலாற்றல் ஒன்று தான். பிரபஞ்சத்திலேயே அழகி அவள் தான் என்று அவளுக்குத் தெரியும். அள்ள அள்ளக் குறையாத அன்புள்ளவள். பிறரைப் பற்றிய பிரக்ஞைகள் எல்லாம் அவளுக்குக் கிடையாது. "சரியானதைச் செய்ய எனக்கு யாருடைய அனுமதி வேண்டும்?" என்று, திருப்பிக் கேட்பாள் அவள். தானே அந்த உலகில் சிறந்தவள் என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது.
ஒருநாள், ஒளியாகிய பெரியவர் அவளை அழைத்தார்.
"நீ இன்னும் முழுமை பெற, பிறவிக்கடலில் ஜென்மங்கள் எடுத்தாக வேண்டும். நீ போ!" என்று, ஒரு திரையைக் கை காண்பித்தார்.
எதற்காக என்றெல்லாம் அவரைக் கேட்டுவிடத் தாமிராவால் கூட முடியாது. அதெல்லாம் காலம் காலமாக நடந்து வரும் ஒன்று. அந்த வட்டம் தாமிராவால் உடைந்து விடக்கூடாதாம். அவளைப்பொறுத்தவரை இதற்கு மேல் என்ன முழுமை தேவை என்று புரியவில்லை. ஒருவேளை முழுமையாக இருந்தாலுமே கூட , தாமிராவும் பிறரைப் போலவே அந்த வட்டத்தின் வழி வந்தாத வேண்டும் என்று நினைக்கிறாரோ! அவருக்குத் தாமிராவும் பிற ஒளிப்புள்ளிகளைப் போலவே வெறும் ஒளிப்புள்ளி மட்டுமே. அன்பு,பாசம் என்பவற்றை வளர்த்துக்கொண்டால், நியாயம், அவை வளருமளவாய்க் குறைந்து போகும் என்பது அவரது கொள்கை.
அவளது சோகம் புரிந்தோ என்னமோ அவர் இலேசாய்க் கண்சிமிட்டினார்.
“நான் உன்னை வெறுமனே அனுப்பி வைக்கவில்லை. ஒரு சவாலோடு தான் அனுப்பி வைக்கிறேன். அதை உன்னால் நிறைவேற்ற முடிந்தால் நீ அடுத்த பிறவிக்குச் செல்ல வேண்டியதில்லை.” என்றார்.
“என்னால் முடியாது என்று என்ன இருக்கிறது?” அவள் ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இதோ, நிரந்தர அமரத்துவத்தை இந்தப் பிறவியிலேயே அவள் வென்றெடுக்கப்போகிறாள். அவளுக்குள் அதற்குள் கனவுகள்!
“உன் உடலும் நீயும் ஒன்றாக வேண்டும்” என்றார் அவர்.
“இது என்ன சவாலா? நான் தான் உயிர் என்னும் போது அந்த உடல் என் சொல்லைக் கேட்காதா என்ன?” கேள்வி கேட்டாள் தாமிரா.
“என்னையே குறைவாக எடை போடுகிறாய் தாமிரா. நான் படைத்த சதையானது மிக மிகச் சிக்கலானது. அவற்றுக்குப் புறவுலகில் ஏராளம் சவால்களும் கவனக்கலைப்பான்களும் உண்டு. ஒருநாள், ஒரு நொடிகூட தங்கள் உடலோடு தொடர்பு கொள்ள முடியாத ஆன்மாக்கள் உனக்கு முன்னே ஓராயிரம் பேர் என் வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள்.”
“என்னால் முடியும்.” தாமிரா அவசரமாய் இடையிட, பெரியவர் சிரித்தார். பிறகு கைகளால் என்னவோ வட்டங்கள் செய்து அவளை மறைய வைத்தார். அவள் மறைந்தே போனாள், பூமியை நோக்கி.
அவளது ஒளியை, பத்து வருடங்கள் குழந்தை இல்லாத வினிக்குள் இருந்து குட்டியாய் ஒரு சதைத்துண்டு உள்ளிளுத்துக்கொண்டது.
“நான் பேசுவது கேட்கிறதா?” என்று,முதல் கேள்வி கேட்டாள் அவள்.
மென் குரலில் ஆம் என்றது அது. தாமிராவுக்கு வெகு திருப்தி
ஒன்பது மாதங்கள் அந்தச் சதைத்துண்டு வளர வளர, தான் யார்? அந்தச் சதைத்துண்டு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மென்குரலில் சொல்லிக்கொண்டே இருப்பாள். அந்தச் சதைத்துண்டுக்கும் இப்போதெல்லாம் புரியும் போலிருக்கிறது. உற்சாகமாய்க் கை காலசைக்கும், என்னவோ அவளது வார்த்தைகளில் உத்வேகம் கொண்டதைப் போல. பிறகு, அவள் சிரி என்றால் அது சிரித்தது. அவள் கையசை என்றால் அசைத்தது. வெளியே என்னாகும் என்ற பயம் கொஞ்சம் கொஞ்சமாய் தாமிராவுக்குள் மறைந்து நம்பிக்கை பிறந்தது.
நீண்ட நெடிய ஒன்பது மாதங்களின் பின் அவள் கண்ணைத்திறந்த போது வினியைச் சுற்றி இரண்டு வைத்தியர்களோடு அவள் கணவனாய் இருக்கவேண்டும். கண்கள் பனிக்க நின்றிருந்தான்.
பிடிமானமற்ற கயிறு போல அந்தக்குழந்தை புது உலகில் திமிறித் துடித்தது.
அதற்குப் பசித்தது.
வினியின் தொடுகையில் பேராறுதல் கண்டது.
அந்த மனிதரைப் பார்த்துச் சிரித்தது.
முடியாது. ஒளியாகிய பெரியவரைத் தவிர வேறு யாரும் உனக்குத் தாய் தந்தையாய் ஆக முடியாது. தாமிரா அலறினாள்.
இப்போது தாமிராவின் குரல் வெகு தூரமாய்ப் போய் விட்டதோ என்னமோ, அதற்குக் கேட்பதாக இல்லை.
எல்லோரும் அதை ஆதிரா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
குழந்தை வளர ஆரம்பித்தது. அது நிறைவாய்ச் செய்து முடிக்கக் கூடிய விசயங்களுக்கெல்லாம் தயங்கித் துயரமடைய, தாமிரா உள்ளே சலித்துப்போவாள். திரும்பத் திரும்ப உத்வேக மொழிகளை அதன் காதில் சொல்லிக்கொண்டே இருப்பாள். காலம் தவறி ஒரு வழியாய் செய்து முடிக்கும் அது .
அதற்கு வயதாக ஆக தாமிராவின் நிலை போத்தலில் அடைத்த பூதத்தின் நிலையாகிப்போனது. ஒரே ஒரு வித்யாசம், இந்த உடலென்னும் போத்தலுக்குச் சிந்திக்கத் தெரிகிறது, தப்பும் தவறுமாக! வெறுத்தே போனாள் அவள். அவளின் குரல் ஆதிராவை எட்டினால் அல்லவா அவளுக்குப் புரியும்! இரண்டு சுவர்களின் இருபக்கம் இருந்து கொண்டு பேசும் நிலையை எப்படி மாற்றுவது?
மறுபக்கம் இருப்பவளுக்கு நான் தேவை! அவளும் நானும் உடன்பாட்டில் இருந்தால் மட்டுமல்லவா நான் வந்த காரணத்தை நிறைவேற்ற முடியும்? வெளியில் இருக்கும் என் உடலுடனேயே என்னால் பேச இயலவில்லை. ஒளியாகிய பெரியவரின் சிரிப்பின் காரணம் புரிந்தது. ஆன்மாக்கள் திரும்பத்திரும்ப முடியாத பிறவிக்கடலில் விழும் காரணமும் புரிந்தது. ஆனாலும் தாமிரா முயற்சியைக் கைவிடவே இல்லை.
விடிகாலை நேரங்களில் விழித்ததும் ஆதிரா புரிந்தும் புரியா நிலையில் இருக்கும் போது அந்த நாளைக் குறித்து உத்வேகப்படுத்தித் தன்னம்பிக்கை ஊட்டுவாள்.
கண்ணாடி எனும் இரசாயனத்தை நம்பி அவள் தன்னம்பிக்கை தளரும் போது, 'நீ பிரபஞ்சப் பேரழகி என்று தெரியாத அறியாமையில் இருக்கிறாயே பெண்ணே!' என்று தலையில் அடித்துக்கொள்வாள் அவள். அவளோடு எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும்? உடலே விரும்பாமல் அவள் மட்டும் விரும்பி எந்தப் பலனும் இல்லை என்று நன்றாகப் புரிந்தது. 'இந்த நாசமாய்ப் போன ஆதிரா' என்று திட்டிக்கொண்டே போனவள் சட்டென்று நிறுத்தினாள்.
இந்த உடல் பொல்லாதது. அளவற்ற அன்பை மட்டும் அறிந்த தாமிராவுக்குச் சலிப்பும் கோபமும் உண்டாக்க வைக்கிறது, தன்னை போலவே.
ஒளியாகிய பெரியவர் சிரிப்பதைப் போலிருந்தது. தாமிராவை யாராலும் மாற்ற முடியாது. ஆயிரம் தவங்களைத் தாண்டி, புடமிட்ட அவளது ஒளியை இந்தச் சாதாரண மனித உடல் மாசுபடுத்துமா? ஆனால், கொஞ்சமே கொஞ்சம் தன் ஒளி மங்கலாய்ப் போனதை அவள் அறிந்தே இருந்தாள்.
எப்படி உடலோடு தொடர்பு கொள்வது? ஆதிரா தூங்கும் சமயம் புறவுலகத்தின் கவனக்கலைப்பான்கள் ஏதும் இல்லாத சமயம் ஒளியின் வடிவில் செய்திகளை அவளுக்குக் கடத்த முயன்றாள். கண்ணாடி என்னும் இரசாயனத்தைப் பார்த்துத் தன்னம்பிக்கை குறைந்திருப்பவளை நீயே பிரபஞ்ச அழகி என்று நிரூபிக்கக் கனவுகளில் அவளைக் கதாநாயகி ஆக்கினாள். ஆனால், ஒளியாகிய பெரியவர் அதற்கும் ஒரு பொறி வைத்திருந்தார்.
விழித்ததும் மங்கலாகவே நினைவிருக்கும் கனவுகள் சற்று நேரத்தில் ஆதிராவுக்கு மறந்து போய்விட ஆரம்பித்தன, ஆனாலும் கனவுகளின் பாதிப்பு அவளிடம் கொஞ்சம் இருந்தது. கனவுகளின் பொருள் தேட ஆரம்பித்தாள். சிந்திக்க ஆரம்பித்தாள். ஆனாலும், தாமிராவின் குரல் அவளுக்குக் கேட்கவில்லை.
ஆதிராவின் தோல்விகளைத் தாமிரா வெறுத்தாள். வெறுப்புத் தன் இயல்பல்ல என்று புரிந்து அந்த இயல்பைத் தனக்கு உண்டாக்கியதற்காகவும் அவள் ஆதிராவை இன்னும் வெறுத்தாள்.
ஒருநாள் ஆதிரா கோவிலுக்குப் போயிருந்தாள். அங்கே எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு சுவாமி வந்திருக்கிறாராம். நண்பியின் அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ஆதிராவுக்கு அவரின் சொற்கள் மனதுக்குள் பெரும் நம்பிக்கையை விதைப்பதை தாமிரா ஆச்சர்யமாக உணர்ந்தாள். அவரது கண்களையும் சதா சிரித்த முகத்தையும் அவள் யோசனையோடு பார்த்துக்கொண்டே இருக்கச் சட்டென நிமிர்ந்தார் அவர்.
“உன் அலைபாய்தலை கைவிடு!” என்றார்.
என்ன? என்னை இந்தச் சாமியாரால் பார்க்க முடிகிறதா என்ன?
இல்லையே இன்னும் ஆதிரா அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க அவர் என்னமோ ஒரு சுவடியை அவளுக்குப் படித்துக்கொண்டிருந்தார்.
பிரமையா என்ன?
சுவடியைப் பார்த்த நிலையிலேயே அவர் இருக்க, கண்கள் மட்டும் அவளை நிமிர்ந்து பார்த்தால் போலிருந்தது, தாமிராவுக்கு.
“பிரமையல்ல பெண்ணே உன்னுடன் தான் பேசுகிறேன்.”
“என்னை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?” தாமிரா அதிசயத்தோடு அவரையே பார்த்தாள்.
“உன்னை அனுப்பியவனுக்கு உன்னைத் தெரியாதா?”
“ஒளியாகிய பெரியவரா?”
“உங்களை மட்டும் அனுப்பி வைக்கவில்லை பெண்ணே, நானும் இங்கே தான் இருக்கிறேன்”
மடிந்து முதல் தடவையாய் அழுதாள் தாமிரா.
“நான் தோற்கபோகிறேன் பெரியவரே...”
“தோல்வியை ஒத்துகொள்ளும் மனம் வந்ததே நீ வெற்றியை நெருங்குகிறாய் என்று தான் அர்த்தம் பெண்ணே!”
“என்னால்..என்னால் அவளைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லையே!”
“ஆதிரா, உன் மனித வடிவம்; உன் கைப்பொம்மையல்ல, அவளை வெறுப்பாய்ப் பார்க்காதே!”
“வெறுக்காமல் எப்படி இருக்க முடியும்?”
“தேவதை நீதான் தாமிரா. அவள் வெறும் மனுசி . அவளை வெறுத்தால் நீங்கள் ஒன்றாக ஆக முடியாது.”
தாமிராவுக்குள் சிந்தனைகள் தறிகெட்டோடின.
“என் சவாலை மீண்டும் எண்ணிப்பார். ஒருவேளை நீ அதைத் தவறாக அணுகியிருக்கலாம். இன்னும் உனக்குக் காலம் இருக்கிறது,திருத்திக்கொள்ள." அவர் குறும்பாகச் சிரித்தார்.
பெரியவரே...
அவரைக் காணோம், ஆதிராவோடு பேசிக்கொண்டிருந்தவர் அவளுக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தார். அவளும் எழுந்து இப்போது பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தாள்.
'யோசி யோசி..என் சவாலை மீண்டும் எண்ணிப்பார் தாமிரா' யோசனையில் உடலுக்குள்ளே அங்குமிங்கும் நடந்தாள்.
உடலும் நீயும் ஒன்றாக வேண்டும் என்பது தானே? அதாவது, தாமிராவும் ஆதிராவும் ஒரே சிந்தனை செயலாக மாற வேண்டும்.
“நீ சவாலைத் தவறாக அணுகிக் கொண்டிருக்கிறாய்!”
எப்படி எப்படி எப்படி...
எதிரேயிருந்த சுவரில் இரண்டு கடவுள் பொம்மைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னக் குழந்தை ஒன்று அதைக் கீழே தட்டி விட்டு மீண்டும் அதன் அம்மா காண முன்னே எடுத்து வைக்க முனைந்தது.
நீலம் இடப்பக்கம், சிவப்பு வலப்பக்கம். தாமிரா அவள் போக்கில் புன்னகையோடு நினைத்துக்கொள்ள, குழந்தையோ, சிவப்புப் பொம்மையை இடப்பக்கம் வைத்துவிட்டு நீலத்தை வலப்பக்கம் வைத்தான்.
'ஐயோ மனிதக்குழந்தையே! இந்தச் சின்ன விசயத்தை உன்னால் ஞாபகம் வைத்திருக்க இயலாதா?' என்று அங்கலாய்த்த தாமிரா, அடுத்து அந்தக் குழந்தை பொம்மைகளின் கைகளை இணைத்து அணைத்தாற்போல வைத்து விட்டுச் சிரிப்பதைக் கண்டதும் சிந்தனை சங்கிலி அறுந்து போக நின்றாள் .
இந்த அழகு அப்போது இருக்கவில்லை, நிச்சயமாக!
தாமிராவாக ஆதிரா ஆக முடியாவிட்டால் என்ன? தாமிரா ஆதிரா அளவுக்கு இறங்கி வர முடியுமே! ஆதிராவாக வாழ்க்கையை எதிர்கொண்டு செல்ல முடியுமே!
ஒளியின் பெரியவர் மனத்தில் மீண்டும் புன்னகைப்பது போலிருந்தது அவளுக்கு
இப்போது அந்தக் குழந்தை மீண்டும் பொம்மைகளை இடம் மாற்றியது. தாமிரா பொங்கிச்சிரித்தாள். ஆதிராவை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தாள்.
இம்முறை, எந்த முன் முடிவும், எதிர்பார்ப்பும், அவளது செயல்கள் மீது சலிப்பும் இல்லாமல்!
அந்த குழந்தையை நோக்கி ஆதிரா முஷ்டியை மடக்க அவனும் திரும்ப மடக்கிக் காண்பித்தான். சிரித்தபடி அவள் அவன் தலை கலைத்தபடி நகரத் தாமிராவுக்கும் புன்னகை முளைத்தது.
புன்னகையோடு அன்பாய் இப்போது ஆதிராவை பார்க்க முடிந்தது தாமிராவுக்கு. அவளும் காரணம் இன்றியே பூவொன்றை பறித்துக் கூந்தலில் வைத்துக்கொண்டு புன்னகையோடு நகர்ந்து கொண்டிருந்தாள்.
பூவின் வாசத்தை நுகர முயன்ற தாமிராவோ எதிரே படிகளைக் கண்டுவிட்டு , 'படி கவனம் ' என்று எண்ண, கவனமாய்ப் படிகளில் கால் வைத்து இறங்க ஆரம்பித்தாள் ஆதிரா.
அவர்கள் இறங்க வேண்டிய படிகள் இன்னும் நிறையத் தூரம் நீண்டிருந்தன.