பகுதி 1
வெண்பஞ்சுக் குவியலாய் வானம் அழகு காட்டிப் பரந்து விரிந்து கிடந்தது.
அந்த மேகங்களைத் தழுவி உறவாடியபடி மிதந்து வந்துகொண்டிருந்தது அந்தக் கனேடியவிமானம்.
உள்ளே, இறுகிப்போன முகத்துடன் அமர்ந்திருந்தாள் சுமுகி. அருகில் அவள் தந்தை சிவபாதம். இந்த இருபத்தியிரண்டு வயதுக்குள் இப்படி ஒரு கோபம் அவளுக்கு வந்ததே இல்லை. அதுவும், அவளது அருமைத் தந்தையின் மீது.
மகளைத் திரும்பிப் பார்த்த தந்தையின் முகத்திலோ, எப்போதும் போல மெல்லிய புன்னகை.
இதுவரை, அவளை எதற்காகவும் கட்டாயப்படுத்தாத சிவபாதம், இந்தப் பயணத்திற்காகக் கட்டாயப்படுத்தியது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட மிரட்டி அழைத்து வந்திருந்தார் என்பதே அவளுக்கு அதிகக் கோபத்தைக் கொடுத்தது.
இப்படி, அவளது எண்ணங்களைச் சிதறடிப்பதுபோலவே போட்டிபோட்டுக் கொண்டு பறந்து வந்த விமானம், கொழும்பு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்காவில் தரைதட்டியது. அடுத்து வந்த நிமிடத்துளிகளில், விமானநிலைய விதிமுறைகளை முடித்துக்கொண்டு வெளியேவந்தனர் , சுமுகியும் அவள் தந்தையும்.
வெவ்வேறு மொழிகளைப் பேசிய மக்கள் கூட்டம் அங்குமிங்குமாய்ச் சென்றுகொண்டிருந்தனர். வித்தியாசமான அச்சூழல் சற்றுப்பயத்தைக் கொடுக்க, தந்தையின் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள் சுமுகி.
ஒருபுறம் தந்தை மீது கோபம் இருந்தாலும் மறுபுறம் பரிதாபமாகவும் இருந்தது.
அவள், எவ்வளவோ மறுத்தும் கேளாது, சொந்த மண்ணையும் தனது உறவுகளையும் காணவேண்டுமென அவளையும் அழைத்து வந்துவிட்டார். பல வருடங்களின்பின், தன் இரத்த உறவுகளைக் காணப்போவதில் அவருக்கிருந்த பேரானந்தம் அவரது கண்களில் பிரகாசித்தது. அதனைக்கண்ட சுமுகியின் மனமோ அவருக்காய் பாகாய் உருகியது.
நாட்டின் போர்ச்சூழலால் பல சிக்கல்களுக்கிடையில் தட்டுத்தடுமாறி கனடா வந்ததை தந்தை அடிக்கடி கூறக்கேட்டிருக்கிறாள். மிகநெருக்கடியான ஒரு சூழலில் தாயை மணந்து கொண்டதையும், அதன் பின்னர், தாயின் உறவுகளுக்கு ஏற்றவகையில் தனது அந்தஸ்தை உயர்த்த வேண்டும் எனும் கட்டாய நிலையில், வேறு எதைப்பற்றியும் சிந்திக்காது இயந்திரமயமாகி விட்டது அவர் வாழ்க்கை எனவும் கூறியிருக்கிறார்.
தனது வாழ்க்கையில், மண்ணுக்காகச் செய்த சில உதவிகளைத்தவிர, கூடப்பிறந்தவள் பற்றிக்கூட கவனிக்காது இருந்து விட்டேன் எனவும் கூறியிருந்தார். இப்போதுதான் காலம் மெல்லக் கனிந்திருக்கிறது. தன் பந்தங்களைக் காணவேண்டும் எனும் ஆவலில் வந்திறங்கியிருக்கிறார், மகள் சுமுகியுடன்.
அவரது உறவென்று சொல்லவும் பெரிதாக யாருமில்லை. நெருங்கிய உறவென்றால் அவரது ஒரே தங்கை சாவித்திரியும் உயிர்நண்பன் தினகரனும் தான் எனச்சொல்லியிருந்தார்.
அப்போதுதான் பார்த்தாள், அவர்களை அழைத்துச் செல்வதற்காக தந்தையின் நண்பர் தினகரனும் வேறொரு தூரத்து உறவினரும் வந்திருந்தனர். தூரத்தில் வரும் நண்பனைக் கண்டதும் தந்தையின் முகத்தில் தோன்றிய மலர்ச்சி, அவள் என்றுமே காணாதது.
தினகரன் அருகில் வந்துவிட இருவரும் கட்டித்தழுவிக் கண்ணீர் சொரிந்து நட்பின் ஆழத்தைக் காட்டிக்கொண்டனர். தந்தையின் அருகில் அமைதியாய் நின்ற சுமுகி மென்மையாய்ப் புன்னகைத்தாள்.
‘இயந்திரமாய் ஓடியோடி உழைத்த அப்பாவிற்குள் கூட இப்படி ஒரு நட்பு ஒளிந்து கிடக்கிறதா? யாரிடமும் அதிகம் பேசாமல் மௌனத்தை மொழியாக்கி வாழ்ந்த அப்பாவின் எண்ணங்கள் இவ்வளவு இனிமையானவையா?’
தாயுடன் கூட தந்தை அவ்வளவு நெருக்கமாய் இருந்து அவள் கண்டதில்லை. இயல்பாகவே அவள் தாயிடம் இருந்த பணக்காரத்திமிரும், தாயின் உறவுகளிடம் தந்தை காட்டிய ஒதுக்கமும் சேர்ந்து அவர்களுக்குள் ஒருவித இடைவெளியை உண்டாக்கியிருந்தது.
ஆனால், அவள் தந்தை அவளிடம் மட்டும் எப்போதும் அன்பும் இனிமையும் மட்டுமே காட்டுவார். ஆனாலும், அதிகம் பேசமாட்டார். அவள் தாய்க்கு ஆடம்பரமும் அலங்காரமும் பிடிக்கும். தந்தையோ, எப்போதும் எளிமையையே விரும்புவார்.
இந்தப் பயணம் தவிர, ஏனைய விடயங்களில் அவள் தந்தையின் கொள்கைகளில் அவளுக்கும் உடன்பாடே. இந்த விடயத்தில் மட்டும் தாய் சொன்னவைகளே சரியென்று தோன்றியது.
தூசும் புழுதியுமான தெருக்களையும் வறியமக்களையும் காண அவள் தாய்க்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனால், அவளையும் அனுப்ப விரும்பவில்லை. தாயைக் கோபப்படுத்த வேண்டாமே என நினைத்தே அவளும் வரமறுத்தாள். அதற்காகத் தான் அப்பாவுடன் சண்டைபோட்டு ஒரேயடியாக மறுத்தாள். ஆனால், இப்போதைய தந்தையின் ஆனந்தம் பார்க்கும்போது அவரோடு வந்ததே சரியெனத் தோன்றியது.
அங்கிருந்து, அவர்களின் பயணம் வடக்கு நோக்கி ஆரம்பமானது. யாழ்ப்பாணத்தில் தான் தினகரனின் வீடு இருந்தது. அவர்களின் வீடு சகல வசதிகளுடனும் கட்டப்பட்டிருந்தது. இவர்கள் வீடுவந்து சேர்ந்தபோது மாலையாகி விட்டது.
தினகரனின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் இருந்தனர். அவரும் மனைவியும் அவரது தந்தையாரும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தனர்.
அன்று, நடு இரவில் தினகரனின் தந்தைக்கு நெஞ்சுவலி வந்துவிட, வீடே அல்லோலகல்லோலப்பட்டது.
அவசரமாய் அருகிலிருந்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அவர். சிவபாதமும் தினகரனுடன் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார். சுமுகியும் தினகரனின் மனைவியும் தான் வீட்டில்.
காலையில் அவரும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட, தனியே அந்த வீட்டில் இருக்க ஏதோ மாதிரி இருந்தது சுமுகிக்கு. தந்தைக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினாள்.
“அப்பா உங்கட தங்கச்சி வீட்டுக்குப் போறதில்லையா?”
“இந்த நிலைமையில நான் தினகரை விட்டிட்டு வரமுடியாது, நீபோறியா?”
“நான் மட்டுமா அப்பா?”
“ஆமாம்டா...” தாமதிக்காது சொல்லிவிட்டார் சிவபாதம்.
“நீ முதல்ல போம்மா, நான் ரெண்டு நாளில வாறன். அத்தையும் நாம எப்ப வருவம் என்று எதிர்பாத்துக்கொண்டு இருப்பா. சின்னப்பிள்ளைகள் வேற, அவேக்கும் ஆசையா இருக்கும் தானே? சொக்லேற் எல்லாம் கொண்டுபோய் குடுத்திட்டு, அவயோட இரு!” தொடர்ந்து சொன்னவர், “ஆனா, சுமுகி...” என்று நிதானித்தார்.
‘முதல் முதல் அத்தை வீட்ட போகப்போறம்; தனியாக நான் மட்டுமா?’ என்ற தயக்கத்தோடு நின்றவள், தந்தையின் குரல் தயங்கியதும், “என்னப்பா?” என்றாள்.